முழு சந்திர கிரகணத்துடனான எனது ஆத்மார்த்தமான சந்திப்பு

முழு சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும் என்று நான் அறிந்த அந்த தருணம், எனக்குள் ஏதோ ஒன்று கிளர்ந்தெழுந்தது - உற்சாகம், உத்வேகம் மற்றும் குழந்தைத்தனமான ஆச்சரியம் ஆகியவற்றின் கலவையாகவே அதனை நான் உணர்ந்தேன். பின்னர் உடனே என் நாட்குறிப்பில் அந்நிகழ்வை பதிவிட்டு எனது அட்டவணையை உறுதி செய்தேன். இது வெறும் வானியல் நிகழ்வு அல்ல என்பது எனக்குத் தெரியும்; இது ஒரு வானியல் அனுபவமாக இருக்கப் போகிறது, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பினேன், ஆத்மார்த்தமாக அதன் அறிவியலை உணர்ந்திட மனம் விரும்பினேன்.

 

அடுத்தடுத்த நாட்களில், நான் கவனமாகத் தயாராகத் தொடங்கினேன், தளவாட ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியாகவும். சோதனை ஓட்டங்களைத் திட்டமிட்டேன், எனது உபகரணங்களை சுத்தம் செய்து அளவுத்திருத்தம் செய்தேன், ஒளியியலைச் சரிபார்த்தேன், ஒவ்வொரு கேபிள், லென்ஸ் மற்றும் பேட்டரியையும் சரியான முறையில் சுத்தம் செய்து சிறந்த முறையில் அனைத்து உபகரணங்களையும் தயார் செய்தேன். எனது 8" டாப்சோனியன் தொலைநோக்கி மற்றும் சோனி 200-600மிமீ லென்ஸ் வரை, ஒவ்வொரு உபகரணத்தையும் என் எண்ண ஓட்டங்களோடு ஈடுசெய்தேன். பொதுவாகவே எதையும் தயார் நிலையில் வைத்திருக்கும் எனக்கு, முழு சந்திர கிரகணம் அணைத்து உபகரணங்களின் செயல்பாட்டினை உறுதி செய்திட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 

அம்சங்களோடு இருக்கும் என்பதை நாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். ஒரு பொருளை வாங்கி உபயோக படுத்திட மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது, அதன் அம்சங்கள் செயல்பாடுகள், தனித்தன்மைகள், வரம்புகள், கோளாறு ஏற்பட்டால் அதை பக்குவமாய் சரி செய்யவோ அல்லது எங்க தவறு நேர்ந்திருக்கும் என்ற அறிவும் நிச்சயம் வேண்டும்... இல்லையேல் பண விரயம், கால விரயம், மனா உளைச்சல் போன்றவற்றை எதிர்பாரா நேரத்தில் எதிர்கொள்ள நேர்ந்திடும். குமிழி நிலைகள் முதல் சமநிலைப்படுத்தும் கிளாம்ப்கள் வரை அனைத்தையும் சரிபார்த்து சரியான முறையில் இயங்குகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டேன்...

 

முதலில், இதை ஒரு சமூக நிகழ்வாக மாற்ற நினைத்தேன். என் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தொலைநோக்கியை அமைத்து, சந்திரனின் மேல் நிழல் நகர்வதை அவர்கள் நிகழ்நேரத்தில் பார்க்க வைக்கலாமா என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அவர்களின் கண்கள் ஆர்வத்தால் பிரகாசிப்பதை நான் பார்க்க விரும்பினேன்.

 

ஆனால் அப்போது எனக்குள் ஒரு அமைதியான குரல் கிசுகிசுத்தது:

"இது தனிப்பட்டதாக இருக்கட்டும். இந்நிகழ்வை முழுமையாய் உணர்ந்து உள்வாங்கிட ஒரு அதிசய வாய்ப்பாக அமையட்டும்”.

 

பிரபஞ்சத்தின் வாயிலாக கிடைக்கும் எந்த அதிசய அனுபவத்தை வெறும் சாதாரண உரையாடல்களோ அல்லது பின்னணி இரைச்சலோ நீர்த்துப்போகச் செய்ய என் மனம் விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன். வானத்தின் அடியில் அமர்ந்து, அமைதியான மனம் கொண்டு, ஒளி மற்றும் நிழலின் அழகிய பிரபஞ்ச நடனத்தைக் கவனிக்கவும், ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்திலும் பிரமிப்பான பிரபஞ்சத்தை அமைதியாகக் காணவும் விரும்பினேன்.

 

ஆகவே நான் எனது இந்த பயணத்தில் ஒரு சிலரை மட்டும் ஈடுபடுத்திடலாம் என்றும் எண்ணம் கொண்டேன்... மேல்கூறியது போல் அவ்வாறு செய்வது நான் ஆத்மார்த்தமாய் உணர்ந்திட விரும்பிய இந்நிகழ்வை பெரும் சுமையின்றி அனுபவித்திடலாம் என்ற எண்ணம்... இந்த எண்ணம் இக்கட்டுரையை படிக்கும் சிலருக்கும் அற்பமாக தோன்றலாம். அனால் எதையும் அமைதியாக உணர்ந்து புரிந்து கொள்ளும் சமூகமாய் நாம் வளர்ந்திருந்தால் பரவாயில்லை, அனால் இங்கே பலருக்கும் அவசரம் அதிகம்... ஆச்சரிய உணர்வை விட அவசரம் அதிகம்... அனுபவ உணர்வை விட ஒற்றை புகைப்படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம்...அறிவியல் அறிவை மேம்படுத்துவதை காட்டிலும் வீண் பேச்சுகள் அதிகம்... உன்னதமான அகமகிழ்வை விட சில நேரம் மட்டும் நிலைத்திருக்கும் 'கலாய்த்தல்' எனும் மலட்டு மகிழ்வில் ஈடுபடுத்துதல் அதிகம்... இவ்வாறான காரணங்களால் பொதுவாகவே நான் அரிதாக நடக்கும்  நிகழ்வுகளை, ஒத்த சிந்தனை கொண்டவருடனோ அல்லது தனிமையிலோ செலவிட விரும்புகிறேன்.

சரியாக மாலை 6:30 மணிக்கு, 13 மாடிகள் உயரத்தில் உள்ள எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நான் காலடி எடுத்து வைத்தேன், அப்போது சந்திரன் தாழ்வாகவும், பொன்னிறமாகவும், தெளிவாகவும் காட்சியளித்தது, அதன் அண்ட மாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒரு மாயாஜாலக் காட்சியால் வரவேற்கப்படுவதாக உணர்ந்தேன்.

 

மொட்டைமாடியில் நிலவை கண்ட ஆனந்தத்தில் சரியான இடத்தை தேர்வு செய்திட ஆரம்பித்தேன். அருகே இருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து வரும் பிரகாசமான விளக்குகள் மற்றும் வடக்கு, மேற்கு பகுதிகளில் வழக்கமாய் தெரிந்திடும் ஒளி மாசு போன்றவற்றால் நான் காணவிருக்கும் கண் கொள்ள காட்சியானது பாதித்திடாத வகையில் சரியான இடத்தை தேர்வு செய்து எனது உபகரணங்களை கீழே சென்று ஒவ்வொன்றாக எடுத்து வந்து அமைத்திட்டேன். நான் எனது உபகரணங்களை துல்லியமாக இணைக்கத் தொடங்கினேன்: 8" டாப்சோனியன், 3" பிரதிபலிப்பான், எனது தொலைநோக்கி, கேமரா, முக்காலி... அந்த உபகரணங்கள் இந்த அரிதான நிகழ்வில் அதன் பங்கிற்குத் தயாராகும் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக இருப்பதாக நான் உணர்ந்தேன்.

All set to launch

நேரம் மாலை 7 மணியானது - அனைத்தையும் தயார் செய்த மகிழ்வோடு இரவு உணவு அருந்திட கீழே வந்தேன்...  இதில் எந்த மூட நம்பிக்கையும் இல்லை, எனது வழக்கமான இரவு உணவே இரவு 7-8 மணிக்குள் முடித்துவிடுவது எனது வழக்கம்...

 

நல்ல உணவு உட்கொண்ட தெம்போடு நான் சரியாக மாலை 8:40 மணிக்கு மாடிக்கு சென்று அழகிய பளீர் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து அந்த அறிய நிகழ்வை முழுமையாய் காண போகிறோம் என்ற ஆவலோடு அமர்ந்திருந்தேன்... எனது ஆர்வத்திற்கு இன்னொரு முக்கிய காரணம், பத்து நாட்களாய் மெகா மூட்டத்துடன் காட்சியளித்த தென் சென்னை பகுதி அன்று கிட்டத்தட்ட 90% தெளிவான வானமாய் காட்சியளித்தது. இது ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாக, பிரபஞ்சத்தின் ஆசீர்வாதமாக நான் கருதினேன்... நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, தீபாவளிக்கு புத்தாடை உடுத்தி மகிழ் நிலை அடையும் ஒரு குழந்தை போல் என் மனம் அந்த நிகழ்வை எதிர்பார்த்து காத்திருந்தது... இதனை முழுமையாக கேமராவில் பதிவு செய்வதை விட ஆத்மபூர்வமாய் உணர்ந்து, வெறும் கண்களால் காணும் சந்தோசத்தை உணரவே நான் விரும்பினேன்... எனவே தொடர் பதிவிற்கு பதிலாக ஒவ்வொரு 15-20 நிமிடத்திற்கு ஓரும் முறை மட்டும் சில புகைப்படங்கள் பதிவு செய்யலாம் என்றும் உள்ளுர நினைத்துக்கொண்டேன். எனவே, கிரகணத்தின் முக்கிய மைல்கற்களை நான் புகைப்படம் எடுத்தபோது, ​​எனது கவனத்தின் பெரும்பகுதி பூமியின் நிழல் ஊர்ந்து செல்வது மற்றும் சிவப்பு நிலவு வெளிப்படுதல் ஆகியவற்றில் இருந்தது.

 

முழு சந்திர கிரகணம் தொடங்கிய சில நிமிடங்களில் தொலைநோக்கி மூலம் சந்திரகிரகணத்தை காண, என்னைச் சுற்றி, அண்டை வீட்டாரும் நண்பர்களும் கூடியிருந்தனர். 9 வயதுடைய என் மகன் 3” தொலைநோக்கியின் அருகே பெருமையுடன் நின்று, தொலைநோக்கியின் மூலமாக  பார்வைக்குழல் வழியாக, மக்களை சந்திரனுக்கு வழிநடத்தினான்.

முழு சந்திர கிரகணத்திற்கு முந்தைய நாள் மாலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது, ​​அவன் தானாகவே தொலைநோக்கியை சரிசெய்து சந்திரனை சரியாக குறிவைத்தான். இன்றிரவு அவனைப் பார்த்து, தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, ​​ எனக்கு மிக பெருமையாகவும், அடுத்த தலைமுறையை சரியாக வழிநடத்தும் போது அவர்கள் எவ்வளவு வேகமாய் அவர்கள் திறமையை திறம்பட மெருகேற்றிக்கொள்கிறார்கள் என்பதை கண்கூடாக என் மகன் மூலம் கண்டபோது மனதில் அமைதியான மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எனக்குள் நிரப்பியது.

 

சந்திர கிரகணத்தின் போது, பூமி சூரிய ஒளியை சந்திரனை அடைவதைத் தடுக்கிறது. அதாவது இரவில், பூமியின் நிழல் அதை மறைப்பதால், முழு நிலவு முற்றிலும் மறைந்துவிடும்.

சந்திரன் சிவப்பு நிறமாகவும் தோன்றலாம், ஏனெனில் பூமியின் வளிமண்டலம் சந்திரனை நோக்கி சில சூரிய ஒளியை வளைக்கும் போது மற்ற வண்ணங்களை உறிஞ்சுகிறது. சூரிய அஸ்தமனம் அவற்றின் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது, ஏனெனில் சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாக கடந்து மற்ற வண்ணங்களை உறிஞ்சும் விதம்.

முழு சந்திர கிரகணத்தின் போது, பூமியில் நிகழும் அனைத்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனங்களிலிருந்தும் சந்திரனின் பிரகாசம் வருகிறது.

 

பின்னர் அது நடந்தது.

 

பூமியின் நிழலில் முழுமையாக மூழ்கியிருந்த சந்திரன், அடர் சிவப்பு நிறமாக மாறியது. இது மாயாஜாலம் அல்ல. அது ரேலே சிதறல் - ஒளியானது பூமியின் மேற்பரப்பில் அதன் ஒளி கதிர்கள் வளைந்து வெளி வரும். நீல நிறங்களை வடிகட்டி, சூடான சாயல்களை விட்டுச் சென்று, சந்திரனை மெதுவாக கருஞ்சிவப்பு அந்தியில், பூமியின் நிழல் குளிப்பாட்டியது. தொலைநோக்கி மூலம், நுட்பமான நகர்வுகளையும், நிலவின் பள்ளங்களில் கூட நிழலாடுவதையும் என்னால் பார்க்க முடிந்தது. அது மிகவும் வித்தியாசமான ஓர் உணர்வை தந்தது..

 

ஆனால் நான் யோசித்தேன், வளிமண்டல மாசுபாடு கிரகணத்தால் காண கூடும் நிலவின் நிறத்தை மேலும் மாற்ற முடியுமா? உண்மையில், அதிக மாசுபட்ட வானங்களில், கிரகண நிலவுகள் பழுப்பு, ஆரஞ்சு அல்லது சாம்பல்-பச்சை நிறத்தில் கூட தோன்றக்கூடும், இது வளிமண்டலத்தில் நிறைந்திருக்கும் ஏரோசோல்களைப் பொறுத்து இருக்கும். நிலவின் மீது படர்ந்து, கண்களுக்கு வித்தியாசமான நிறத்தில் தோன்றும் நிலவானது, பூமியின் வளிமண்டல தூரிகையால் வரையப்பட்ட ஒரு அண்ட ஓவியமாக மாறுகிறது.

 

20மிமீ பார்வைக்குழலுடன் கூடிய எனது டாப்சோனியன் தொலைநோக்கி மூலம், காணக்கூடிய அந்த காட்சி தெய்வீகமாக இருந்தது. பள்ளங்களில் நிழல்கள் இருந்தன, சிவப்பு ஒளி மின்னிக் கொண்டிருந்தன, நேரம் அசையாமல் நின்றது. அது தியானமாக இருந்தது. என் வெறும் கண்களால் பார்ப்பது எனக்கு முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தந்தது - சந்திரன் ஒரே நேரத்தில் பழமையானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் உணர்ந்தேன்.

Astro/Nature Photography are a form of Meditation to me!

சந்திர கிரகணம் ஒரு சிறப்பு நிகழ்வு, ஏனெனில் இது ஒவ்வொரு மாதமும் நடக்காது. சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், பலர் அனைத்து சந்திர கிரகணங்களையும் பார்க்க முடியும். கிரகணம் நிகழும் போது அது இரவில் இருக்கும் பூமியின் பாதியில் நீங்கள் வாழ்ந்தால் நீங்கள் கிரகணத்தைக் காண முடியும்.

சந்திரனின் மேற்பரப்பு பூமியின் நிழலை அமைதியாகத் தழுவியபோது, ​​அது வெறும் ஒரு பிரபஞ்ச நிகழ்வாய் மட்டும் சிவப்பாக மாறவில்லை - நமது ஆன்மாக்களும் மெதுவாகக் கிளர்ந்தெழுந்து, எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை நினைவூட்டின. பூமி, சூரியன் மற்றும் சந்திரனின் அந்த விரைவான சீரமைப்பில், காலத்தால் அழியாத ஒன்றைக் கண்டோம் - வெறும் நிழல் அல்ல, அதற்கு அப்பாலும் உள்ளேயும் உள்ள பரந்த தன்மையைப் பிரதிபலிக்கும் இந்த மாபெரும் அண்டத்தின் பிரதிபலிப்பு…

 

அந்த இரவு வெறும் பார்வையை விட அதிகமாக இருந்தது - உணர்ச்சிகரமாகவும், பிரபஞ்சத்தின் அறிவியலையும் நேரடியாக காட்டி விட்டது.

நாம் எவ்வளவு சிறியவர்கள், ஆனால் எவ்வளவு பெரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது.

வானத்தின் வழியாகப் பார்த்து பகிரப்பட்ட அந்த மௌனத்தில், நான் சந்திரனை மட்டும் கவனிக்கவில்லை... இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களின் ஒன்றான நம் சூரிய குடும்பத்தையும், பூமி சூரியனை சுற்றும் விண்வெளி அறிவியலையும் உணர்ந்து மெச்சித்தேன்.

இது போன்ற வான நிகழ்வுகள் மணித குலத்திற்கு காண கிடைக்கும் அதிசய பரிசுகள் - அவை  வெறுமனே கவனிப்பதற்கு மட்டுமல்ல, எல்லா புலன்களாலும் அனுபவிக்க வேண்டியவை. அவை நம்மை வழக்கத்திலிருந்து வெளியே இழுத்து, பிரபஞ்சத்தின் தாளத்திற்குள் இழுக்கின்றன. நாம் போதுமான அளவு இடைநிறுத்தினால், நாம் பிரபஞ்சத்தைப் பார்ப்பது மட்டுமல்ல, நாம் அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை உணர்வோம்.

 

மனிதனின் எண்ணம் - காற்று - பிரபஞ்சம் - இவை அனைத்திற்கும் பொதுவானது அணு.

 

"எண்ணம் போல் வாழ்வு".

Total Lunar Eclipse Images I shot (@OrbitingMinds is my Space & Astronomy education page I recently started)

Next
Next

My Soulful Encounter with the Total Lunar Eclipse