கும்பக்கரை கொடைக்கானல் மலையேற்ற அனுபவம்
ஏற்றங்களும் இறக்கங்களும் கற்றுக் கொடுத்த பயணம்
சில பயணங்கள்
புகைப்படங்களுக்காக அல்ல…
பதக்கங்களுக்காக அல்ல…
சில பயணங்கள்
உள்ளுக்குள் அமைதியை தேட… நம்மையே சந்திக்க…
இந்த பயணமும் அப்படித்தான்.
ஆண்டு முடிவை இயற்கையுடன் கொண்டாட வேண்டும்
2025 ஆம் ஆண்டின் இறுதியை எட்டி, புது ஆண்டில் காலடி எடுத்து வைக்க, சத்தமும் சச்சரவும் நிறைந்த இந்த சுற்றத்தில் இருந்து விலகி இயற்கையோடு ஒன்றி இந்த பிரபஞ்சத்தின் அனுபவத்தை உணர்ந்தவாறு அமைதியாய் கழித்திட விரும்பினேன்...
காடுகளோடும், மேகங்களோடும், அமைதியோடும் முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு எண்ணம் இருந்தது.
அதற்காகத் தான்
கும்பக்கரை → வெள்ளகவி → வட்டக்கனால்
என்ற இந்த கடினமான, ஆனால் அழகான மலையேற்றத்தை தேர்ந்தெடுத்தேன்... கொடைக்கானலுக்கு கார், பேருந்து, இருசக்கர வாகனம் என்று கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேல் சென்றுள்ளேன். அங்கிருக்கும் பல கிராமங்கள் வரை சென்று இயற்கையை அனுபவித்தவன் நான். தேனி அருகவே தான் சொந்த கிராமம் என்றாலும் கொடைக்கானலுக்கு கால்நடையாக செல்ல முற்பட்டதில்லை... இந்த பயணம் அதை சார்ந்து அமைத்திட முயற்சி மேற்கொண்டேன்... முதலில் நான் மட்டும் செல்வதாக இருந்தது. பின் என் மனைவியும் என்னோடு இப்பயணத்தில் சேர்ந்திட விருப்பம் தெரிவித்தாள்...
இந்த ட்ரெக், என் மனைவியுடன் சேர்ந்து செல்லும் இரண்டாவது மலையேற்ற பயணம். சற்று கடினமானது...
முந்தைய அனுபவமானது (Kullar Caves Trek) ஒரு விஷயத்தை தெளிவாகக் கற்றுக்கொடுத்தது. கட்டுக்கோப்பான சீரான உடல் தகுதி அடைந்திட யோகா மட்டுமே போதாது. கார்டியோ மற்றும் உடல்வலு கொள்ள செய்யும் உடற்பயிற்சிகள் நிச்சயம் தேவை. குள்ளர் குகைகள் மலையேற்றத்தின் போது இதை தெளிவாக உணர்ந்து கொண்டாள் என்னவள்!!! மேலும், இதயத்துடிப்பு மற்றும் அதன் அளவீடுகள் பற்றியம் கேட்டு அறிந்து கொண்டாள்...
“யோகா மட்டும் போதாது…
காடுகளில் நடக்க,
உடலுக்கும் மனதுக்கும் வலிமை தேவை.”
அதனால்:
தினமும் 5 கி.மீ brisk walk
Strength & Cardio training
Tai Chi – உடலையும் மனதையும் சமநிலைப்படுத்த
பின்னர் நான் கூறிய அறிவுரையின்படி தினமும் வேகமான நடைப்பயிற்சி, Tai Chi போன்ற சில பயிற்சிகளும், ஒரு நாள் திருவண்ணாமலை கிரிவலம் (16km) என மலையேற்றத்திற்கு ஆயத்தம் ஆனோம்.
10 நாட்களில் அவளுடைய resting heart rate கூட 90–110 லிருந்து 70–85 ஆக மாறியது. அந்த மாற்றமே இந்த கடினமான மலையேற்றத்தின் முதல் வெற்றி.
கும்பக்கரை – காடு நம்மை வரவேற்ற தருணம்
அனைத்தையும் சிறப்பான முறையில் மலையேற்ற பையில் அடைத்துக்கொண்டு விட்டோம்...வானிலை மாறுபாடுகளை சமாளிக்க தேவையான ஆடைகள், மலையேற்றத்தின் போது தேவைப்படும் ஊட்டச்சத்து உணவுகள் அனைத்தும் கட்டிக்கொண்டு சென்னையில் இருந்து பேருந்து மூலம் பெரியகுளம் சென்றடைந்தோம்.
விடியற்காலை என்பதால் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் தங்கி சற்று இளைப்பாறி விட்டு காலை 8 மணியளவில் கிளம்பி சென்றோம்... கும்பகரையில் வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு எங்கள் நடைப்பயணத்தை இனிதே தொடங்கினோம்.
கும்பக்கரை நீர்வீழ்ச்சி அருகே மலையேற்றத்தை ஆரம்பித்தோம்.
காட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் மனதில் ஒரு அமைதி. வாழ்வில் தினந்தோறும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாய் உள்ளன...அமைதியாய் தேவையற்ற சச்சரவுகளை தவிர்த்து வலுவான மரங்களைப் போல் வாழ்வை கடந்திட வேண்டும்... ஆனால் மனிதர்கள் பலர், ஆடம்பரத்திற்கு அடிமையாகி, இயற்கையை விட்டு விலகி, தர்ம நியதிகளை மறந்து தானும் துன்பம் கொண்டு பிறரையும் தொல்லை செய்து வாழும் இந்த கூட்டத்தில் இருந்து, தன்னை நம்பி வந்து சரணடைந்த எங்களை அள்ளி அனைத்து கொண்டது இயற்கை...
இந்த மலையேற்றம் எங்கள் உடல்தகுதி மற்றும் மனவலிமையை மட்டும் சோதிக்க கூடியதாக அல்ல... எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் தன்னை நம்பி நல்லெண்ணம் கொண்டு வரும் எவரையும் நல்ல சுற்றத்தோடு வரவேற்று, சிறந்த அனுபவங்கள் மற்றும் நாம் சமாளிக்க கூடிய சவால்களை எதிர்கொள்ள கூடிய ஓர் பயணமாய் அமைந்தது.
வழி நெடுக எங்களை தழுவி வரவேற்ற தென்றல், எங்களை கண்காணித்துக்கொண்டே இருந்த மரங்கள், ஏதாயினும் உலகம் சுற்றிக்கொண்டிருப்பது போல் தன் வேலைகளை தொய்வில்லாமல் செய்யும் சிற்றுயிர்கள், ஆனந்த ராகத்தோடு வரவேற்ற அழகு பறவைகள், வழி நெடுக பச்சை பசேலென வீற்றிருக்கும் செடிகள், மனதை பலப்படுத்தி உணர்வுக்கு உயிரோட்டம் அளிக்கும் வாசமிகு மருத்துவ செடிகள், எங்களை தாங்கவும் சிறுசிறு சவால்களை தரவும் அமைந்திருந்த பாறைகள் என வழி நெடுக பிரபஞ்சத்தின் இந்த படைப்புகள் எங்கள் வாழ்வில் புது புது அர்த்தங்களையும் நல்ல வலிமையையும் கூட்டிக் கொண்டே வந்தன.
இது போன்ற பயணங்களில் சேரும் இடம் மட்டும் என் இலக்கு அல்ல... செல்லும் பாதையில் காணும் இயற்கையின் ஒவ்வொரு அமைப்பும் எனக்கு முக்கியம். பறவைகள், விலங்குகள், சிற்றுயிர்கள், பனி நிறைந்த பாதைகள் என ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செல்வது தான் என் வழக்கம்... நான் பலமுறை மலை, பனிப்படர்வு போன்ற படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடும் போது பலர் என்னிடம் எல்லாம் ஒன்று போல் ஒரே இடமாக தன தெரிகிறது என கூறுவர்... இருக்கலாம்.... அவர்களுக்கு!!! - நிச்சயம் எனக்கு ஒவ்வொன்றும் ஊர் புது அனுபவம்... நான் பதிவிடும் படங்கள் நான் ரசித்து அனுபவித்த இயற்கை உலகின் சொற்பமான பகுதியே... அனால் ஒவ்வொரு இயற்கை சார்ந்த பயணத்தின் போதும் இப்பிரபஞ்சம் எனக்கு கொடுக்கும் அனுபவம் எனக்கு கிடைக்கும் மாபெரும் செல்வம்... மனநிறைவான வாழ்வு!
இந்த மலையேற்ற பாதையில் நாங்கள் கண்ட ஒரு சில காட்சிகள்:
சிலந்திகள்
பூச்சிகள்
புழுக்கள்
லண்டானா பூக்கள்
காபி செடிகள்
அவகாடோ மரங்கள்
ஒரு Wood Mason Snake கூட நாங்கள் கண்டோம்...
நான் அவளிடம் சொன்னேன்:
“மெதுவாய் நடந்து, இயற்கையின் ஒவ்வொன்றையும் நாம் ரசித்து, ஆராதித்து நம்மை அதில் மூழ்க செய்யும் தருவாயில் தான் இந்த காடு தன்னை நம்முடன் இணைத்திடும்…”
காடுகளையும் காட்டு உயிரினங்களையும் நான் சிறுவயது முதலே கவனித்து வந்தாலும், இப்போதும் காடுகள் பிரம்மிப்பாகவே உள்ளன. காடுகளில் பல வகை செடிகொடிகள் மரங்கள் மட்டுமல்லாது, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், விலங்குகள் என பலவித உயிரினங்களைக் காணமுடியும். தற்போது குழந்தைகள் டிஸ்கவரி சேனலிலும், கூகுலிலும் சென்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றனர். ஆனால், அவையெல்லாம் நேரடியாக கண்டுணரும் அனுபவத்திற்கு முன் வெகு சாதாரணம்.
காட்டுக்குள் மறைந்த ஒரு வரலாறு
இவ்வாறாக இயற்கையில் ஒன்றி எங்கள் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்கையில், காட்டுக்குள் ஒரு சிறு பாழடைந்த மண்டபம் போல் ஓர் கட்டிடம் தென்பட்டது... எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது.
ஒரு உள்ளூர் நபரிடம் கேட்ட போது அவர் கூறியது:
“திப்பு சுல்தான் காலத்தில்
மக்கள் இங்கே ஒளிந்திருந்தார்கள்…
சிலர் திரும்பவே வரவில்லை,
இந்த மண்டபத்திலேயே புதைந்து போனார்கள்…” என்று!!!
அந்த இடத்தில் நாங்கள் மௌனமாய் எதுவும் பேசாமல் நின்றோம்.
ஏனெனில் சில இடங்களுக்கு விளக்கம் தேவையில்லை, உணர்வுகள் மட்டும் போதும்.
வெள்ளகவி கிராமம்
கிட்டத்தட்ட 8 கி.மீ. மலையேறிவிட்டோம்... எனக்கு வெள்ளகவி கிராமம் எங்கே என்ற ஆர்வம் மேலும் சிறந்த உந்துதல் தந்தது... என்னை அறியாமலே நான் வேகம் எடுத்து ஒரு வழியாக 9 கி.மீ. கடந்து அந்த அழகிய, இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தை அடைந்து விட்டேன்... கிராம வாசலில் பெரிய பலகை :
“இந்த கிராமம் புனிதமானது. விருந்தாளிகள் காலணியுடன் நுழைய வேண்டாம்.”
நான் வந்த வேகத்தில், என் மனைவியை பின்னே விட்டு நான் முன்னேறி வந்துவிட்டேன்...
எனவே, கிராமத்தினுள் நுழையாமல், அவளுக்காக காத்திருந்தேன்... 15 நிமிடத்திற்கு பின் அவள் வந்தடைந்தாள். இருவரும் காலணிகளை கழற்றி பையில் வைத்து விட்டு ஊருக்குள் நுழைந்தோம்.
சுமார் ஐம்பது வீடுகள்... அதற்கு மேல் கோவில்கள். ஏனெனில் இவ்விடத்தில் தெய்வங்கள் வாழ்வதாகவும், தெய்வமே இக்கிராமத்தை காப்பதாக மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். எனவே யாரும் அங்கே காலணிகள் அணிந்து ஊருக்குள் யாரும் நடப்பதில்லை... விருந்தாளிகளும் நடக்க அனுமதியில்லை! அங்கே செல்லும் நாமும் அந்த வழக்கத்தை மதிப்பதே நமக்கும் நலம் பயக்கும்... உள்ளூர எனக்கு 'காந்தாரா' படத்தில் வாழ்வது போல் தோன்றியது.
என்னை பொறுத்த வரை, காட்டுக்குள் அமையும் ஒவ்வொரு பயணமும் எனக்கு ஒரு புது வித சூழலில் வாழ்க்கை அமைவது போலவே உணர்கிறேன்... குறிப்பாக என்னை இயற்கையின் ஓட்டத்தில் சமர்ப்பணம் செய்வதால் அவ்வாறான உணர்வுகளை என்னால் உணர முடிகிறது என எண்ண தோன்றுகிறது.
ஊருக்குள் நுழையும் போதே ஒரு அமைதியான உணர்வை என்னால் உணர முடிந்தது. ஊருக்குள் நுழைந்த எங்களை ஒரு தெய்வீக கோவில் எங்களை அன்புடன் வரவேற்றது. அந்த ஆசியை பெற்று கொண்டு ஊருக்குள் மகிழ்வாய் நுழைந்தோம். கிராமத்தில் வீடுகளின் தோற்றத்தையும், தெருக்களின் அமைப்பையும் பார்த்துக் கொண்டே அமைதியாய் சென்றோம்... சிலர் எங்களை புன்னகையோடு வரவேற்றனர். ஒரு வீட்டின் முன் நாங்கள் சிறிது இளைப்பாற அமர்ந்தோம்... அவ்வீட்டார் எங்களை நலம் விசாரித்து அன்போடு கடுங்காப்பி தந்து அன்போடு உபசரித்தனர்.
பின்னர் அங்கிருந்து நடந்து ஊரின் கிழக்கு முனையில் அமைந்திருக்கும் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட "Old Kodai Camping" முகாமிற்கு சென்று எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு 'Tent'-இல் நாங்கள் எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு சற்று வெளியே அமர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அந்த அழகிய பனி படர்ந்த காட்சியினை ரசித்து கொண்டிருந்தோம்... பின்னர் மதிய உணவு உட்கொண்டு இருவரும் மெதுவாய் நடந்து மலையின் முனையில் பச்சைபசேலென்று இருந்த புல்வெளியில் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசித்து மெய்மறந்திருந்தோம்...
நட்சத்திரங்கள், முகாம் தீ, மனிதர்கள்
எங்களை போல் வெவேறு ஊர்களில் இருந்து, எங்களையும் சேர்த்து மொத்தம் 21 பேர் இருந்தோம் அந்த முகாமில்... ஒருவரை ஒருவர் அறிமுக படுத்தி கொண்டு அனைவரும் கடுங்காப்பி அருந்தினோம்... பின்னர் நானும் என் துணைவியும் எங்கள் கூடாரத்திற்கு (Tent) சென்று சற்று ஓய்வெடுத்தோம்.
சிறு தூக்கத்திற்கு பின் கூடாரத்தை விட்டு வெளிய வந்து புல் மீது அமர்ந்து, அழகிய அந்த இரு சூழ் காட்சியினையும், சிலு சிலுவென வீசும் குளிர் காற்றை உள்வாங்கிக்கொண்டும், எங்கள் வாழ்க்கை கோட்பாட்டினை பற்றி அமைதியாய் அன்பாய் உரையாடி கொண்டிருந்தோம்.
இரவு நேரம் நெருங்கியதால் 'முகாம் தீ' அமைத்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அவரவர் அனுபவங்களை மகிழ்வாய் பகிர்ந்துக்கொண்டோம்! பின்னர் அவரவர் மொழியில் சில நேரம் பாடல்கள் பாடி ரசித்து கொண்டு இரவு உணவை ஒன்றாய் சந்தோசமாய் அருந்தினோம். பின்னர், சிலர் புதுவருட கொண்டாட்டத்தை நோக்கி சில ஏற்பாடுகள் செய்தனர்... நானும் என்னவளும் அதில் நழுவி, எங்கள் கூடாரத்தின் நுழைவில் அமர்ந்து இயற்கை அன்னையின் மடியில் சரணடைந்தோம் ... எங்கள் வாழ்க்கை, காதல், வாழ்க்கை முன்னேற்றங்கள், பிள்ளைகளின் முன்னேற்றம் என அமைதியாய் சில விஷயங்களை அலசிவிட்டு எப்பொழுதும் போல் விரைவாய் உரங்க சென்றோம். எங்கள் வழியிலே அமைதியாய், அன்பாய், சத்தமின்றி, ஆடம்பரமின்றி மகிழ்வாய் புது வருடத்தை தூக்கத்திலே வரவேற்றோம் :)
நாள் 2 – கண்ணுக்கு தெரியாத பாதைகள்
காலை 6:30.
பனி படர்ந்த காலை வேளையிலே, மேகங்கள் சூழ் மலை உச்சியில் சூரியோதயத்தை காணலாம் என்ற ஆர்வத்தோடு என் புகைப்பட கருவிகளை எடுத்த்து கொண்டு ஆதவனின் காட்சிக்காக காத்திருந்தேன்.
மேகங்களுக்குள் சூரியன் வருவான் என்று நினைத்தோம்.
ஆனால் மேகங்கள் எல்லாவற்றையும் மூடியது.
அது கூட அழகுதான்.
“மாற்றம் ஏமாற்றமல்ல.
அது பிரபஞ்சத்தின் இன்னொரு காட்சி.”
என்பதை தெளிவாய் உணர்ந்தவன் நான்.
உறக்கத்திலிருந்து என்னவள் எழுந்தாள்.
அன்பாய் அனைத்து அவளின் கைபிடித்து அழகிய காலை வேளையில் குளிர்காற்றில் கடுங்காப்பி அருந்திக்கொண்டே இருவரும் நடந்தோம்...
அமைதியான சூழல்,
அவளுக்கு நான் எனக்கு அவள்…
சில்லென்ற காற்று,
அன்பாய் அமைதியாய்,
எங்களுக்குள் உரையாடல்,
வேறெந்த சிந்தனையும் அல்ல...
எங்கள் வாழ்வை தவிர!!!
“இந்த பயணம்
நடை அல்ல…
உறவு.”
வெள்ளகவி கிராமத்தின் எழில்மிகு தோற்றம்
வெள்ளகவி → வட்டக்கனால்
நேரமானது! இருவரும் காலை சிற்றுண்டியை உண்டுவிட்டு எங்கள் இரண்டாம் நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம். நேற்றை விட இன்று தூரம் குறைவு தான்... அனால் உயரம் கூடுதல்... 50% அதிக steep gradient. எங்களை தயார்படுத்திக்கொண்டு, கையில் காலணிகளை எடுத்துகொண்டு கிளம்பினோம்.
ஊர் எல்லையை தாண்டியதும், திரும்பி நின்று வெள்ளகவி ஊருக்கும், எங்களை நன்முறையில் கவனித்துக்கொண்ட அன்பு நிறைந்த மக்களுக்கும் நன்றி கூறி பிரியா விடை கொடுத்து, காலணிகளை அணிந்து கொண்டோம்...
ஏற்கனவே கணித்த படி இரண்டாம் நாள் மலைப்பாதை கடும்பனியோடு மிக உயர்வாகவும், பாதைகள் கரடு முரடாகவும் அமைந்து இருந்தன... அனால் அதை எதிர்நோக்கியே எங்கள் மனதையும், உடற்தகுதியையும் தயார் படுத்திருந்தோம்...
வழியாவும் என்னவள், இன்னும் எத்தனை தூரம் என்று கேட்டுக்கொண்டே வந்தாள்... நானும் "தீரன் அதிகாரம்" படத்தில் 'தோ கிலோமீட்டர் பையா" என கூறுவது போல் "Just 1 கிமீ " என கூறி கொண்டே வந்தேன்... நேற்று அவள் பெரிதாக அவ்வாறு கேட்கவில்லை... பரவாயில்லை, இரண்டாம் நாள் பயணம் சற்று கடுமையானது தான்.
வழியில் எங்கள் முகாமில் எங்களோடு தங்கிய சிலருக்கு மூச்சிரைப்பு, தசைப்பிடிப்பு என வந்து வழியிலேயே முடியாமல் சிலர் அமர்ந்து விட்டனர்... நாங்கள் ஏற்கனவே இதற்கு தயார்படுத்தி, வழக்கமாய் எங்கள் வாழ்வுமுறையில் உடற்பயிற்சிகள் செய்துவந்ததால் நாங்கள் மெதுவாய் முன்னேறி சென்று கொண்டிருந்தோம்...
பாதையில் செங்குத்தான சாய்வின் ஒரு பகுதி
இறுதியில் அணைத்து சவால்களையும் கடந்து 'Dolphin Nose' பகுதி வனத்துறை சோதனைச்சாவடி வந்தடைந்தோம்.
Dolphin Nose – கடைசி சோதனை
Dolphin Nose-ல்
ஒரு நிம்மதி.
ஆனால்…
கடைசி 800 மீட்டர் தான் உண்மையான சோதனை.
நின்றால் முடியாது என்பதால்
நான் தொடர்ந்து ஏறினேன்.
மேலே வந்து பார்த்தால்
கீழே அவளை காணவில்லை.
எனக்கு தெரியும், கடைசி 800 மீட்டர் சாதாரண உயரமல்ல ... கூடுதல் உழைப்பு போடா வேண்டியிருக்கும் ... எனவே அவளுக்காக காத்திருக்கும் அந்த வேளையிலே, அருகிலிருந்த தேநீர் கடையில் bread omlette, தேநீர் கேட்டு விட்டு அவர்களிடம் சற்று நேரம் என் கைபேசி சார்ஜ் போட கேட்டுக்கொண்டேன். கேட்டிருந்த உணவு வந்தது... தேநீர் அருந்திவிட்டு, bread omlette சாப்பிட்டுக்கொண்டே அவளுக்காக காத்திருந்தேன்.
அதோ அவள் வந்துவிட்டாள் என அவள் சுவடைக்கண்டதும் மனம் ஆனந்தம் கொண்டது. மேலேறி வந்தாள். கை கொடுத்து வரவேற்று அவளை வரவேற்று bread omlette உண்ண கொடுத்தேன்.
வேர்களை வெல்லும் என் ராணி!
இருவரும் வெற்றி களிப்பில் இருந்தோம்... பின்னர் நீர் அருந்தி விட்டு அந்த கடைக்காரரிடம் ஏதேனும் வாடகை மோட்டார் வண்டி தொடர்பு உள்ளதா என கேட்டேன்... உடனே அவர் ஒருவரை தொடர்புக்கொண்டு என்னிடம், 10 நிமிடத்தில் வண்டி வந்துவிடும் என கூறினார்.
பின்னர் வண்டி வந்தது, சார்ஜ் போட்ட கைபேசியை எடுத்துக்கொண்டு, அவருக்கு நன்றி கூறி விட்டுவண்டியிலேறி வட்டக்கனால் பகுதியிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிறுத்தம் சென்றோம்.
மலைகளிலிருந்து மனிதர்களிடம்
வத்தலகுண்டு பேருந்து நிறுத்தத்தில், பேருந்தேறி வீடு திரும்புவதற்கு முன் இருவரும் ஒரு தேநீர் அருந்த சென்றோம். அங்கே என்னவள், கடைக்காரருக்கும் , எங்களைப்போல் தேநீர் அருந்தி கொண்டிருந்த ஒரு நபரிடம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தாள். பதிலுக்கு அவரும் குதூகலமாய் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, எங்கள் பைகளை பார்த்து விட்டு மலையேற்றம் ஏதும் செய்து விட்டு வருகிறீர்களா என் வினவினார். நாங்கள் ஆம் என்றோம். எங்கள் அனுபவத்தை கேட்டறிந்தார்... சற்று நேரம் நாங்கள் மகிழ்வாய் உரையாடி விட்டு கிளம்பும் தருவாயில், எங்களுக்கும் சேர்த்து அவரே பணம் கொடுத்தார். நாங்கள் நன்றி கூறிவிட்டு அவருடன் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
“சில மனிதர்கள்
மலைகளை விட உயரமானவர்கள்.”
அந்நிய நண்பருடன் ஓர் மகிழ்வான தருணம்!
பின்னர் வத்தலகுண்டிலிருந்து திண்டுக்கலுக்கும் , திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கும், பொது போக்குவரத்தில் பயணம்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
மலைகள் என்ன கொடுத்தது?
இந்த பயணம் எனக்கு மீண்டும் நினைவூட்டியது:
காடுகள், மலைகள், மரங்கள், ஆறுகள் - இவற்றையெல்லாம் ரசிப்பதற்கு எல்லோருக்கும் ஆவல் உண்டு. ஆனால், இரண்டு நாட்கள் சுற்றுலா முடியும் வரை மட்டுமே! அதன்பின், வாழ்க்கை என்னவோ அலுவலக கேபினுக்குள்ளும், மடிக்கணினிகளோடும், செல்ஃபோனில் பரபரப்பான உரையாடல்களாகவும் பலருக்கும் கடந்துபோகிறது. காடுகளோடும் மலைகளோடும், மரங்களோடும் இரண்டறக் கலந்து வளர்ந்த ஒருவரின் அனுபவம் நமது அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும்.
“இயற்கை அகம்பாவத்தை விரும்பாது.
உண்மையைத்தான் விரும்பும்.”
வாழ்க்கையில் முயற்சிதான் ஆரம்ப பாடம். அதனை விரும்பி படிக்க வேண்டும். இந்த களம்தான், நம்மை முன்னிருத்தி முன்னேற்றிக் கொள்ள பயன்படக் கூடிய பக்கம். இதனை உணர்ந்து உள்வாங்கி, வாழ்க்கையை வெற்றிக்கு இட்டுச்செல்லுங்கள். முயற்சியில் வென்றவருக்கு என்றும் வராது இகழ்ச்சி.
சிலநேரங்களில் நமக்கு தனிமை தேவைப்படும். அப்போது தன்னுடைய வாழ்க்கையை புரிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும். ஏனெனில், புரிந்து கொள்ளும் வாழ்க்கையில் தான், தன்னை அறிந்து கொள்ளும் நிலையும், மற்றவர்களை எடை போட்டு பார்க்கும் திறமையும் நமக்குள் கிளர்ந்து எழுந்து, நம் தடங்களை பதித்து, அடுத்த கட்டத்துக்கு போகவைக்கும்.
நாங்கள்:
ஒரு ஆண்டை பணிவுடன் முடித்தோம்
புதிய ஆண்டை நன்றியுடன் தொடங்கினோம்
மலைகள் விடை கொடுக்கவில்லை.
அவை காத்திருக்கின்றன.
நாம் மீண்டும் நடக்கத் தீர்மானிக்கும் வரை.
உங்களுக்குள் மறைந்து இருக்கும் நல்ல எண்ணங்களை, அரும்புகள் விரிந்து மலராக வாசம் வீசுவது போல், நம்பிக்கை கரங்கள் விரித்து, செயலாக்கம் செய்து வெற்றிக்கண்டு வாகை சூடுங்கள். அன்பு வாசகர்கள் அனைவருக்கும் எந்தன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...